20 அவது திருத்தத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சக்களால் விசாரணை

20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பொதுஜன முன்னணியின் செயலாளரது கையெழுத்தில் பிரேம்நாத் தொலவத்தவுக்கு இதுகுறித்த கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டத் தொடர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்த, அதிலுள்ள குறைபாடுகளை பட்டியலிட்டார்.

குறிப்பாக நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதாக எந்தவொரு இடத்திலும் கூறப்படாதிருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்போது அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ள பொதுஜன முன்னணியின் தலைமை, தொலவத்தவின் கோரிக்கை குறித்து விசனம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

20ஆவது திருத்தம் குறித்து ஆளுந்தரப்பினரில் பலரும் வரவேற்பு வகையிலான கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில், அதில் குறைபாடுகள் இருப்பதாக அவற்றைப் பட்டியலிட்டுள்ள பிரேம்நாத் தொலவத்த குறித்து விசாரணை அவசியம் என்ற முடிவையும் பொதுஜன முன்னணி எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் ஒற்றையாட்சியை பாதுகாத்தல் சார்ந்த விடயம் உள்ளடக்கப்படாவிட்டாலும், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் தற்போது அமுலிலுள்ள 78ஆம் ஆண்டு யாப்பில் அந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு சார்ந்ததாக காணப்படுகின்ற படியினால் ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் 20ஆவது திருத்தம் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 19ஆவது திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்கள்கூட இந்த புதிய திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் வழங்கமுடியும்.

அதேபோல, பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இருந்த பெரும்பாலான அதிகாரங்களும் இந்த புதிய திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் நாடாளுமன்றம் தெரிவாகி ஒருவருடத்தின் பின்னர் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரம், பொலிஸ்மா அதிபர், புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புக் கட்டமைப்பில் நியமனங்கள், நீக்கல் அதிகாரம் என்று பல அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே உரித்துடையதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க, 20ஆவது திருத்தச் சட்டத்திலும் ஒற்றையாட்சியை பாதுகாத்தல் தொடர்பிலான பிரிவுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கோரியிருப்பது ஜனாதிபதியை மேலும் சர்வாதிகாரப் போக்கிற்கு தள்ளுவதற்கான வழிகளாகவே இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.