குட்டிமணிக்கு ஒரு சட்டம் பிரேமலாலிற்கு ஒரு சட்டமா? _ சஜித் ஆவேசம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமைத் தொடர்பில் சஜித் பிரேமதாச இன்றும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையயொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றை விவரித்து, சபாநாயகரின் தவறை சுட்டிக்காட்டினார்.

”1982ஆம் ஆண்டு அல்லது குட்டிமணி என அழைக்கப்படும்  செல்வராசா யோகச்சந்திரன்  நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். தேர்தல்கள் திணைக்களமும் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது, யோகச்சந்திரன் மேன்முறையீட்டையும் செய்திருந்தார். எனினும் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அரசியல் அமைப்பின் 89ஆவது  மற்றும் 91ஆவது பிரிவிற்கு அமைய அவருக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. அந்த சமயத்தில் இருந்த சபாநாயகர் பாக்கிர் மாக்கர் சிறந்த முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார். எனினும் அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில், அரசியல் அமைப்பின் 89ஆவது  மற்றும் 91ஆவது பிரிவை மீறி நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள் என்ற காரணத்தை கவலையுடன் தெரிவிக்கின்றேன். நீங்கள் ஏன் அந்த நிலைப்பாட்டில் இருந்து செயற்படவில்லை. இந்த சபையின் பாதுகாப்பு மற்றும் இந்த சபையின் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அரசியல் அமைபினை நீங்கள் பாதுகாக்க  கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.” எனக் குறிப்பிட்டார்.