மைக் எடுத்துவர மறுப்பு; மாணவனை தாக்கிய ஆசிரியர்

வவுனியாவிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றில் இன்று (10) காலைப் பிரார்த்தனையின் போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது (மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

அம்மாணவன் ஒலிவாங்கியை எடுத்துவர மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஆசிரியர், மணவர்கள், ஆசிரியர்கள் முன்னால் வைத்து அம்மாணவனின் கன்னத்தில் அறைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கன்னத்தில் காயமடைந்த மாணவனின் பல் உடைந்துள்ளதாக தெரிவித்து அவரது உறவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.