படகு மூலம் இலங்கை வர முற்பட்ட ஒருவர் கைது!

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முகம்மது அலி (43) என்பவர் இறுதி கட்ட பேரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள கடந்த 2006 ஆம் ஆண்டு விமான மூலம் தமிழகம் வந்துள்ளார்.

விசா முடிந்த பின்னரும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமில் சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், முகமது அலி மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்லும் நோக்கத்தில் ஏர்வாடி கடற்கரையில் பிளாஸ்டிக் பைப்புகளை பயன்படுத்தி மிதவை ஒன்றை தயாரித்து அதன் மூலம் இலங்கைக்கு தப்பி சென்று விடலாம் என திட்டமிட்டு மிதவையை தயார் செய்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதி மீனவர்கள் இது குறித்த ஏர்வாடி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஏர்வாடி பொலிஸார் முகமது அலி, மற்றும் அவருக்கு உதவிய சகேதரர் முகமது ஹசன் (35) நண்பர் சாகுல் ஹமீது (29) ஆகிய மூவரையும் கைது செய்தனர் பின், அவர்களிடம் இருந்த மிதவையை பறிமுதல் செய்து ஏர்வாடி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

விசாரணையில், போரின் போது தமிழகம் வந்ததாகவும், தற்போது உடல் நிலை சரியில்லை, மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் மீண்டும் மன்னார் வளைகுடா கடல் வழியாக ஏர்வாடியில் இருந்து மிதவை மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏர்வாடி பொலிஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரனைக்கு பின் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இந்நிலையில், சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது. எனவே பிடிபட்ட மூன்று பேரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ஏர்வாடி பகுதியில் பதுங்கி இருந்தனரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து இந்திய பணம், இலங்கை பணம், பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.