வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை அவரிடம் இருந்தது. எங்கெல்லாம் போர்நிறுத்தம் செய்தாரோ அங்கெல்லாம் அவர் தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை – என்று தெரிவித்தார் நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

” உண்மையில் தலைவர் பிரபாகரன் அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவன் நானாகத்தான் இருக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை வீராப்புள்ள ஒரு தலைவராக செயற்பட்டார். உலகிலேயே சொந்த விமானப்படையையும், கடற்படையையும் நிறுவிய அரசு அல்லாத தரப்பாக விடுதலைப் புலிகளே இன்று வரை உள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவரின் அரசியல் விளக்கப்பாடு இதைவிட பெரிதும் குறைவானதாகவே இருந்தது. இந்தியா மற்றும் வெளியுலகம் குறித்த இணக்கப்பாடு பெரிதாக இல்லை. புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்த பலர் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். இதுவே தீர்வொன்றைக் காணாது தொடர்போராட்டத்துக்கு வழிவகுத்தது.

அவரது படைகள் குறித்து அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது. பாலசிங்கம் தான் அவருக்கு முழுமையான ஆலோசகராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கனார். பாலசிங்கத்தின் அறிவுரைகள்படி நடக்கும் வரை அனைத்தும் சரியாகவே நடந்தது. ஆனால், அவரின் ஆலோசனைகளைக் கேட்காத நேரத்தில் எல்லாம் பிழையாகிப் போனது.

பாலசிங்கம் நல்ல சமையல்காரர். நானும், பாலசிங்கமும் ஒன்றாக இருந்து நல்ல உணவு உட்கொண்டிருக்கிறோம். நாம் முன்வைத்த யோசனையின்மூலம் அந்த நேரத்தில் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் என நம்பினேன். எமது யோசனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியன ஆதரித்தன.

ஆயினும் அது ஒரு வலிமையான யோசனை. நீங்கள் போரில் வலுவிழந்து கொண்டு போகிறீர்கள். வெற்றி பெற எந்த வழியுமில்லை என தலைவர் பிரபாகரனிடம் கூறினோம். ஒவ்வொரு போராளியும் பதிவு செய்யப்பட்டு தெற்குக்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதே எமது யோசனை ஆகும்.

சரணடைந்த பின் எவருமே கொடுமைப்படுத்தப்பட மாட்டர்கள் என்பதற்கு அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. இந்த யோசனை நிறைவேறும் என நானும், அன்ரன் பாலசிங்கமும் நம்பிக்கையுடன் தான் இருந்தோம்.

எனினும், 2009 ஏப்ரலில் தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து விட்டார்” என்றார்.