
இன்று மற்றும் நாளை சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்புக்களில் சிவில் ஆடை அணிந்த இரகசிய காவற்துறையினரை கடமையில் ஈடுப்படுத்த காவற்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊடரங்கு சட்டத்தை மீறுபவர்கள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் விதிகளை மீறி செயற்படுகின்றவர்கள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 25 ஆயிரத்திங்கு அதிகமானவர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வீதி தடைகளையும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த காலப்பகுதியில் சுகாதார தரப்பினர் கோரியுள்ள சமூக இடைவெளியினை கருத்திற்கொள்ளாது ஒன்றுகூடி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் இந்த இரகசிய காவற்துறையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்