வீதி திருத்த பணியாளர் மீது தாக்குதல்!

வவுனியா – நெடுங்கேணி ஒலுமடு பகுதியிலுள்ள வீதி புனரமைக்கும் நிறுவன தொழிலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

“நேற்று (26) இரவு 6.45 மணியளவில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒருவழிப்பயணம் மேற்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிக்கு அறிவிக்கப்பட்டபோது முச்சக்கரவண்டி செலுத்தி வந்த சாரதி ஒருவர் குறித்த ஊழியரின் கருத்தை உள்வாங்காமல் தனது முச்சக்கரவண்டியை செலுத்தியபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நெடுங்கேணி சந்தியிலிருந்த தனது நண்பர்களை அழைத்து குறித்த வீதி திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” – என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் தலையில் காயமடைந்த ஊழியர் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் .

இந்நிலையில் நேற்று இரவு மேலதிக சிகிச்சைகளுக்காக காயமடைந்த நெடுங்கேணி பெரியமடு பகுதியைச் சேர்ந்த குகமூர்த்தி துசிந்தன் வயது 34 என்ற குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.