வைத்தியர் ஷாபி சிசேரியன் : மரணித்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு!

குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக  இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி சத்திர சிகிச்சை செய்த தாயொருவர் பிரசவித்ததாக கூறப்படும்  சிசு, இரு நாட்களில் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, தாயொருவர் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய குருணாகல் பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இந் நிலையில் குறித்த விடயத்தை குருணாகல் நீதிவானுக்கு பிரத்தியேக வழக்காக தாக்கல் செய்துள்ள பொலிஸார்,  அவ்வழக்கில் சந்தேக நபர்கள் எவரையும் பெயரிடாத போதும், உயிரிழந்த சிசுவின் சடலத்தை மீள அடக்கஸ்தலத்திலிருந்து தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நேற்று அனுமதி பெற்றுக்கொண்டனர்.

 அதன்படி  நாளை வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு, குறித்த சிசுவின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம்  உத்தரவிட்டார்.

 இது தொடர்பில் நேற்றைய தினம் குருணாகல் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சுமனவீர,

‘ குறித்த குழந்தை பிறந்து இரு நாட்களில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பின்னர் அக்குழந்தையின் காலில் தழும்பொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சிசுவின் தாய், தனக்கு குறித்த பிரசவமானது சிசேரியன் சிகிச்சை ஊடாக இடம்பெற்றதாகவும், அதனை வைத்தியர் ஷாபியே செய்ததாகவும் தெரிவித்துள்ள நிலையில், சிசுவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக  முறைப்பாடளித்துள்ளார்.’ என நீதிவானுக்கு  விஷேட அரிக்கையினையும் சமர்ப்பித்து தெளிவுபடுத்தினார்.

 அத்துடன் சட்ட வைத்திய அதிகாரிகளும் நீதிவான் குறிப்பிடும் நேரத்தில் அந்த விசாரணைகலுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்ட நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை  குறித்த சிசுவின் சடலத்தை மீள தோண்டி எடுக்க நீதிவான் உத்தரவிட்டார்