
வீடு ஒன்றில் வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக பதுளை பொலிஸாருக்கும் பதுளை மாநாகர சபை சுகாதார பரிசோதகர்களுக்கும் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர்கள் அங்கு சென்று சோதனையிட்டபோது வீடு ஒன்றில் கசிப்பு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
அலுத்வெலகம பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே கசிப்பும் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இத்தாலி நாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் சிலர் மறைந்திருப்பதாகவும் அவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸாருக்கும் பதுளை மாநகர சபை சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவிக் கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரும் சுகாதாரப் பரிசோதகர்களும் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அந்த வீட்டில் வெற்றுச் சாராயப் போத்தல்கள் பலவற்றை கண்டுபிடித்தனர். வேறு எந்தவொரு நபரும் அங்கு காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தடிபிறிதொரு வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார் அங்கு கசிப்பு காய்ச்சும் பீப்பாய்கள் மற்றும் உபகரணங்கள், கோடா ஆகியவற்றுடன், விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு நிரப்பப்பட்ட போத்தல்களையும் கண்டுபிடித்தனர்.
அவற்றைக் கைப்பற்றிய பொலிஸார் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்தனர். அந்நபரை விசாரணை செய்த போது தயாரிக்கப்பட்ட கசிப்பை இத்தாலி நாட்டில் வசிப்பவரின் வீட்டில் வைத்து விற்பனை செய்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.