இரு பிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை; அதிகாலையில் நடந்த சோகம்!

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை ஒருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாப சம்பவம் இன்று 14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு பிள்ளைகளையும் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அவர்களது தந்தை தனது வீட்டு கிணற்றில் தூக்கி வீசி கொன்றுள்ளார்.

குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பிள்ளைகளை கொழும்பு பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் சேர்த்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இடைவிலகல் மேற்கொண்டு அழைத்து வந்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

அதிகாலை இரண்டு மணியளவில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் ஓடி சென்று கிணற்றில் இருந்து பிள்ளைகளை மீட்கும் போது பிள்ளைகள் உயிரிழந்துவிட்டனர். பின்னர் இரண்டு பிள்ளைகளின் சடலமும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து 40 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். (150)

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com