சங்கத்தானையில் ரயில் மோதி இளைஞனின் கால் துண்டிப்பு!

தென்மராட்சி, சாவகச்சேரி, சங்கத்தானையில் ஐயா கடைச் சந்திக்கு அருகில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவருடை கால் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.

பசளை மூடைகளுடன் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் தந்தையும் மகனும் வந்துள்ளனர். வரும்போது ஐயா கடைக்கு அருகாமையில் வீதியோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு தந்தை தூங்கிவிட்டார் எனவும் மகன் ரயில் தண்டவாளத்தில் கால்களை வைத்தவாறு அமர்ந்திருந்து கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலுடன் மோதுண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மாத்தறை வடக்கை சேர்ந்த எம்.எச்.வி.விஜயரத்ன (20-வயது) என்பவரே காயமடைந்தார்.

இதன்போது குறித்த நபரின் காலொன்று துண்டிக்கப்பட்டது. உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.