திருகோணமலையில் நீண்டகால நீர் திருட்டில் ஈடுபட்டுவந்த பிரபல ஹோட்டல் சுற்றிவளைப்பு!

திருகோணமலைமலை 3 ஆம் கட்டை பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த பிரபல ஹோட்டல் ஒன்றின் நீர் திருட்டினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர்.

திருமண மண்டபம் மற்றும் அதனுடன் சேர்ந்த ஹோட்டலிலே இவ்வாறு நீண்ட காலமாக திருட்டு இணைப்பின் மூலம் நீர் திருடப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ரகசிய முறைப்பாட்டின் அடிப்படையில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் சிறப்பு கணக்காய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த திருட்டு இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறப்பு கணக்காய்வு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

திருட்டு தொடர்பான குற்றச்சாட்டை குறித்த ஹோட்டலில் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதுடன் தண்டப் பணத்தினை தாம் செலுத்துவதாக தெரிவித்ததாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் தண்டப்பணம் தொடர்பான கணக்காய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.