
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளாரென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர், இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் பொலன்னறுவை தமின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கான நபரின் மனைவியே, இம்மாவட்டத்தின் இரண்டாவது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த 10 பேர், கடந்த வியாழக்கிழமை (09) பொலன்னறுவை தமின்ன கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் மாதிரிகள், மருத்துவ பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டபோதே, மேற்படி பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்புபட்ட பத்துப் பேரின் மருத்துவ பரிசோதனை, நேற்று (12) சுகாதாரத் துறையினருக்கு கிடைக்கப்பெற்றது.