தேர்ல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் 

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு உதவித் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கமைய, அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உட்பட்ட அதிகாரிகளுடன்  எதிர்வரும் தேர்தலை சுயாதீனமாக நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி, சந்திப்பினை மேற்கொண்ட தன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதேவேளை, ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதிகளில்  வேட்பாளர்களின்  இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் , இவை  நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசாங்க நிதியில் அமைக்கப்படும் வீதிகள், சில வேட்பாளர்களினால் திறப்பு விழாக்கள் செய்யப்பட்டு திறக்கப்படுவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறு தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரியு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பாக ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருவதாகவும், அது தொடர்பில் விரைவில் அறிவித்தல் வரும் எனவும் அவர் கூறியள்ளார்.