ஈஸ்டர் தாக்குதல் துன்பத்திற்கு நியாயம் வழங்கப்படும் – ஜனாதிபதி

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர் சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை இன்று பக்தியுடன் நினைவுகூர்கின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதுடன் உலக மக்கள் முகம்கொடுத்துள்ள பாரிய அனர்த்தம் அனைத்து பக்தர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

உயிர்ப்புப் பெருவிழா இந்நாட்டில் உள்ள கிறிஸ்தவ பக்தர்களுக்கு கடந்த காலங்களில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும் கடந்த வருடம் அது மிகவும் துன்பகரமான ஒன்றாக மாறியது. இன்றும் அந்த கவலை நீங்கவில்லை.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதேபோல் அத்தகைய சம்பவங்களை தாய்நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்கும் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் உள்ளது.

நாடும் மக்களும் சவால் மிகுந்த சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினதும் சுகாதார அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப வீடுகளில் இருந்து இயேசு கிறிஸ்துவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. – என்றுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com