மன்னாரில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார்!

மன்னார் பேசாலைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சோதனை மேற்கொண்ட பொலிஸார் அவ் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இவரை நீதிமன்றில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் சந்தேகத்துக்குரிய வீட்டுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பேசாலை பகுதியில் ஒரு வீட்டில் புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவ் வீட்டின் தரையை நள்ளிரவு நேரம் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக அப் பகுதி மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டதுடன் சோதனை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியுள்ளதா எனவும் வினவியுள்ளனர்.

இதனையடுத்து இச் செயற்பாட்டை கைவிட்ட பொலிஸார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.