தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம் – சம்பந்தன் இடித்துரைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதன் போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சந்திப்பின்போது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சி பேச்சுத் தொடர்பிலேயே அதிக நேரம் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் பொதுவாகப் பேசினோம்.

விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆரம்பித்துள்ள பேச்சு, தமிழ்த் தேசியப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம்.

ஜனாதிபதி, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால் அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ஹெய்மிடம் தெரிவித்தேன்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் ஆதரவு வழங்குவோம். அரைகுறைத் தீர்வை  ஏற்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என்பதைச் சொல்ஹெய்மிடம் சுட்டிக்காட்டினோம்” – என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com