ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் உயிரிழப்பு: புதிய தலைவர் பொறுப்பேற்பு!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவின் போது, ‘கடவுளின் எதிரிகள்’ என்று அழைக்கப்படுபவர்களுடன் சண்டையிடும் போது கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால் அவர் மேலதிக விபரங்களைத் தெரிவிக்கவில்லை.

ஒக்டோபர் நடுப்பகுதியில் தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் சுதந்திர சிரிய இராணுவத்தின் நடவடிக்கையில் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் வடமேற்கு சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, ஐ.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவர் அபு இப்ராஹிம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அபு அல்-ஹஸன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார்.

இப்போது அவரும் கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருடைய கொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

அபு அல்-ஹாசனைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டது, அவர் தலைவராக தனது பெயரில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்தநிலையில், அமைப்பின் அடுத்த தலைவராக அபு அல்-ஹூசைன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்தார்.

முந்தைய அறிவிப்பைப் போலவே, செய்தித் தொடர்பாளர் தனது உண்மையான பெயர், தேசியம் அல்லது பின்னணியை வெளியிடுவதைத் தவிர்த்தார்.

மேலும், அபு அல்-ஹூசைனை மூத்த முஜாஹிதின்களில் ஒருவர் என விபரித்த அவர், குழுவின் ஆதரவாளர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com