தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது – |ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிசூட்டினை மேற்கொண்டதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் கண்டித்துள்ளார்

காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கோடியக்கரை அருகே வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது.

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். அதனால் ஏதேனும் ரோந்துப் படகு வந்தாலே அவர்கள் அச்சத்தில் படகை விரைவாக செலுத்தும் நிலை தான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினர் செயல்பட்டிருக்க வேண்டும். பதற்றம் நிறைந்த இந்திய – இலங்கை கடல் பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய – மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க

வேண்டும்!” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com