தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே நிற்போம் என அறிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, சிங்களவர்கள் மீதான அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக சர்வதேசத்தை நாடப்போவதாக கூறியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்கள் நசுக்கப்படலாம் , சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் 

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதையும்,வெகுவிரைவில் சகல பிரச்சினைகளில் இருந்தும் மீள வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் புரிந்துணர்வு அடிப்படையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நடுத்தர மற்றும் வறுமை கோட்டில் உள்ள குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் எடுத்துரைத்துள்ளார்கள்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு என்ற ரீதியில் வெகுவிரைவில் மீண்டெழ வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் வடக்கு மற்றும் கிழக்கு குறித்து அதிக கரிசணை கொள்ளவில்லை.

தவறான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என்பதை அரசாங்க தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.பொருளாதார மீட்சிக்காக பல்வேறு வழிமுறைகளை தேடிக் கொண்டிருக்கும் பின்னணியிலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மிதமிஞ்சியதாக உள்ளது.

நாட்டில் யுத்த சூழல் இல்லாத சூழலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 14 பேருக்கு ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.யுத்தத்தின் போதும்,யுத்தத்தின் பின்னரான காலத்தின் போதும் இராணுவத்தினர் மோசமான குற்றங்களில் ஈடுப்பட்டார்கள் என வடக்கு மற்றும்  கிழக்கு மாகாண மக்கள் கடுமையாக குற்றஞ்சாட்டும் போது அவர்கள் மத்தியில் தொடர்ந்து இராணுவத்தினரை குவிப்பது எந்தளவிற்கு நியாயமாகும்.

2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கு மாத்திரம் 19 விழுக்காடுகள் ஒதுக்கப்பட்டன. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை துறைகளுக்கு 10 இற்கும் குறைவான விழுக்காடுகள் ஒதுக்கப்பட்டன.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலிலும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு –செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் முழுமையாக அரச கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.தேர்தலை நடத்துமாறு ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.தேர்தலுக்கு செல்ல தயாரில்லாத அரசாங்கம் ஜனநாயகத்திற்கு முரனாக செயற்படும் போது இராணுவத்தை கொண்டு ஜனநாயகத்திற்கு முரனாக செயற்பட முயற்சிக்கிறது.

 இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடியினை எதிர்கொள்ளும்,இருப்பினும் அரசாங்கத்தையும், நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சபையில் குறிப்பிட்டதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். மறுபுறம்  அரசாங்கம் அடக்குமுறையினை நிறுத்தாவிடின் சர்வதேசத்தை நாடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிடுவார் என எதிர்பார்க்கவில்லை.

தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட போது எமது உறவுகளுக்காக நாங்கள் சர்வதேசத்தை நாடினோம்.அப்போது எவரும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை ஆனால் தற்போதைய அடக்குமுறைகளுக்கு மாத்திரம் சகலரும் எதிர்ப்பு தெரிவித்து,சர்வதேசத்தை நாடுவதாக குறிப்பிடுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது. மக்கள் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. ஆகவே நாட்டு மக்களை போல் நாங்களும் மக்களாணையை கோருமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com