அங்கஜன் சார்பாக இராணுவம் செயற்படுகிறது – இவ்வாறு சுகாஸ் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுகிறது என்று சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான க.சுகாஸ்
தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“நேற்றைய தினம் முன்னணியின் தலைமையகம் மற்றும் வட்டுக்கோட்டை அலுவலகம், நல்லூர் அலுவலகம் என்பன இராணுவத்தாலும் பொலிஸாராலும் முற்றுகைக்குள்ளானது.

இம்முற்றுகையினை கரும்புலிகள் தினத்திற்கான முற்றுகையாக நாங்கள் கருதவில்லை. ஒருபுறம் சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அங்கஜன் இராமநாதனை வெற்றி பெறவைக்க இராணுவம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.

இன்னொருபுறம் முன்னணியின் பிரச்சாரங்களை முடக்குவதன் மூலம் எத்தகைய நோக்கத்துடன் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.” – என்றார்.