வெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்!

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்படையினரின் முகாம் ஒன்று அமைந்துள்ள காணியில் புதைக்கப்பட்ட வெடி பொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை இன்று (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் சிறப்பு அதிரடிப்படையினர் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கடற்புலிகளின் முகாம் அமைந்த குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு ஊடகாவியலாளர்களையோ, பொதுமக்களையோ அனுமதிக்காத நிலையில் சுமார் 6 மணி நேரம் கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போதும் தேடி வந்த பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்ட சில ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வீதிகளில் இலங்கை படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துவரும் வேளையிலும் பலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடம் உண்டு என எடுத்துக்காட்டும் நடவடிக்கையாகவே ஆங்காங்கே வெடிபொருட்கள் மீட்பதும் வெடிபொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவதும் குறிப்பிடத்தக்கது.