கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் மனு : சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனம்

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் முன்னனி செயற்பாட்டாளராக அறியப்படும், அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் தாம் கடும் ஆட்சேபங்களை முன் வைப்பதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு 09 ஆம் திகதி அறிவித்தார்.

தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரிய அருட் தந்தை ஜீவந்த பீரிஸின்  இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய, எஸ். துறை ராஜா மற்றும் யசந்த கோதாகொட  ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி, சவீந்ர விக்ரம இந்த ஆட்சேபனத்தை அறிவித்தார். 

உரிய நீதிமன்ற நடை முறைகளை பின்பற்றாது, குறுக்கு வழி ஊடாக இவ்வாறான நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதை ஏற்க முடியாது என இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சவீந்ர விக்ரம உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட அரச சட்டவாதி சவீந்ர விக்ரம,

‘கனம் நீதியரசர்களே,  கோட்டை நீதிவான், கடந்த மே 28 ஆம் திகதி யோர்க் வீதிக்குள் நுழையக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு  மே 27 ஆம் திகதி இம்மனுவின் மனுதாரருக்கு பொலிசாரால் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மனுதாரர், அந்த நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸார், கோட்டை நீதிவான் நீதிமன்றில்  சட்ட விரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை,  நீதிமன்றை அவமதித்தமை,  அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை,  அரச ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை,  காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அவரை பொலிசார் தெளிவுபடுத்தியுள்ள போதும், அவர் இதுவரை கோட்டை நீதிமன்றில் ஆஜராகவில்லை. 

இது தொடர்பில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘ என சிரேஷ்ட அரச சட்டவாதி சவீந்ர விக்ரம குறிப்பிட்டார்.

எனினும் இதன்போது அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் மன்றில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன,  தனது சேவை பெறுனருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு இதுவரை எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள்,  மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை மன்றில் சமர்ப்பிக்க இரு தரப்பினருக்கும்  உத்தரவிட்டு, மனுவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஒத்தி வைத்தார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,  மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன,  முப்படை தளபதிகள், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எவ்வித  நியாயமான காரணங்கள்,  விடயங்களும் இன்றி, பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக  தீர்ப்பளிக்குமாறும்,  வழக்கு விசாரணை செய்து தீர்ப்பறிவிக்கும் வரையில் தான்  கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால  உத்தரவை பிறப்பிக்குமாறும்  குறித்த மனுவில் மனுவூடாக கோரப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com