மலையகத்தில் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் பல பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் மற்றும் வீதி போக்குவரத்து சபை ஊழியர்கள் இணைந்து ஏற்பட்ட மண்சரிவை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ 5ம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பிளக்பூல் பகுதியில் 03 ஆம் திகதி புதன்கி காலை ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன.

எனினும், பிரதேசவாசிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து மண்சரிவை அகற்றி தற்போது ஒரு வழி போக்குவரத்தாக மாற்றியுள்ளனர்.

இதேவேளை, அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகத்தொழுவ பகுதியிலும், தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை மற்றும் கெலிவத்தை மற்றும் கடியலென்ன போன்ற பகுதிகளிலும், அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளயார் மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்  மிக விரைவாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கட்டட தொழிலாளர்கள் வேலைகளை மேற்கொள்ள முடியாது பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழைகாரணமாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதுடன், தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளன.

தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதனாலும், தொடர் மலை பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com