திருகோணமலையில் ஒருவரை கொலை செய்து விட்டு இராணுவ முகாமுக்குள் ஓடிய நபர்

திருகோணமலை – கல்லடி, மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் புத்தளம் – காரியப்பர் வீதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குள் ஓடிச்சென்று புகுந்துள்ளதுடன், கொலை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் அந்த நபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உடப்பு – தானஞ்சோலை, 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபரே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபரின் சடலம் தற்பொழுது மூதூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்