
திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் வயலுக்குச் செல்லும் வீதியின் ஓரத்தில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மஹதிவுல்வெவ – தெவனிபியவர, சமகிகம பகுதியைச் சேர்ந்த பீ.உபசேன (52 வயது) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்து தனது வீட்டாருடன் சண்டை போட்டு விட்டு வயல் காவலுக்காக துவிச்சக்கரவண்டியில் சென்றதாகவும், இன்று காலை அவர் வீதியோரத்தில் துவிச்சக்கரவண்டிக்கு அருகில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன், சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
இருந்தபோதிலும் அவரது சடலத்துக்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்று காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.