கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலைய அமைதியின்மை : தப்பிச்சென்ற 599 பேர் சரண் 123 பேரை தேடி வலைவீச்சு

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர்  சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உருவான அமைதியின்மையின் போது,    தப்பிச்சென்ற 599 பேர்  இன்று மாலை வரை  சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

எனினும் தப்பிச் சென்ற மேலும் 126 பேரை தேடும் பணிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக   பொலிஸார் கூறினர்.

தப்பிச்சென்று சரணடைந்தவர்களில் 261 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அமைதியின்மை ஏற்படும் போது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்படுகின்ற 997 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

இந் நிலையில், கைதி ஒருவரின்  சந்தேகத்துக்கு இடமான மரணம் மற்றும்  நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து தப்பியோடியமை தொடர்பிலும் பிரத்தியேக சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஓஷான் ஹேவாவித்தாரனவின் கீழ்  இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com