மாந்திரீகர் கழுத்தறுத்துக் கொலை : தலைப் பகுதி நில்வலா கங்கைக்குள் ? : சந்தேக நபர் தலைமறைவு

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திப்பட்டுவெவ பகுதியில்,  70 வயதான இரு பிள்ளைகளின் தந்தையை அவரது  தலைப் பகுதியை உடலில் இருந்து வேறாக்கி வெட்டிப் படுகொலை செய்த கொடூர சம்பவம்  பதிவாகியுள்ளது. இன்று ( 27) காலை இந்த சம்பவம் பதிவானதாக  பொலிஸார் கூறினர்.

 அக்குரஸ்ஸ, திப்பட்டுவெவ  பகுதியின்  தலகஸ்ஸ –  வலகடவத்தை பகுதியில் வசித்த 70 வயதான  2 பிள்ளைகளின் தந்தையான பிரதேசத்தின் மாந்தீரிகர்  வெல்லார தந்திரிகே  சுமணபால என்பவரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

 அவரது  60 வயது மனைவியும், 40 வயதான மகளும் சம்பவத்தில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக  அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர், மாந்திரீகரை  கூரிய வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளதுடன் அவரது தலையை உடலிலிருந்து வெட்டி எடுத்து நில்வலா கங்கையில் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சடலத்தில் தலைப் பகுதி இல்லாத நிலையிலேயே பொலிஸாரால் அச்சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன்,  பிரதேசத்தில் காணப்பட்ட இரத்தக் கரைகளை மையப்படுத்திய பரிசோதனைகளின் போது தலை இவ்வாறு நில்வலா கங்கையில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 கொலை சந்தேக நபர் 29 வயதான, கொலைச் செய்யப்பட்ட மாந்திரீகரின் வீட்டுக்கு அருகே வசிக்கும் இளைஞர் என கூறும் பொலிஸார் சந்தேக நபர் தலைமறைவகையுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய  தேடி வருகின்றனர்.  நீண்ட நாட்களாக நிலவிய தனிப்பட்ட தகராறு கொலைக்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர். 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com