
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரங்கு நேரத்தில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் தளர்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் இல்லாத அல்லது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களின் அடிப்படையில் இந்த மீளாய்வு நடவடிக்கையை ஜனாதிபதி செயலணியும் சுகாதார அதிகாரிகளும் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அநுரதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்இதுவரை கொரோனா வைரஸ் அச்சம் ஏற்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஊரடங்கு நேரத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் மக்களின் நடமாட்டங்களில் ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்படும்.
குறிப்பாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னுமொரு மாவட்டத்துக்கு வருவோர் தொடர்பில் இந்த ஒழுங்குவிதிகள் அமையும் அத்துடன் ஒரு வீட்டில் ஒருவருக்கே சந்தை மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்றுவர அனுமதி வழங்கப்படும்.
பொது இடங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி அவசியமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.