சிங்கபூரில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்

சிங்கப்பூரில் முதலாவது குரங்கு அம்மை நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சிங்கபூருக்குச் சென்ற பிரித்தானிய விமானப் பணியாளர் ஒருவருக்கே குரங்கு அம்மை நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவே தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக பதிவான குரங்கு அம்மைத் தொற்றாகும்.

தொற்றாளரை பரிசோதனை செய்த சுகாதார அதிகாரிகள் அவரது உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் என தெரிவித்துள்ளார்கள்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவருடைய பணியாளர்கள் மற்றும் விமானச் சக ஊழியர்கள்  13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என  சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த மே மாதத்தில் இருந்து  42 நாடுகளில் 2,100 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொற்றார்கள் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நோய் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது. 

இந்த நோய் பரவலில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இந்த நோய் பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில் ஏற்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு ஆப்பிரிக்காவிற்கு வெளியே குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

தென் கொரிய அதிகாரிகளும் செவ்வாயன்று  முதல் தொற்றாளரை பதிவு செய்தனர்.

குரங்கு அம்மை நோய் குரங்கு வைரஸால் ஏற்படுகிறது, இது பெரியம்மை போன்ற அதே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது, இருப்பினும் இது மிகவும் குறைவான தீவிரம் கொண்டது.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் முகத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவும் சொறி ஆகும்.

மனிதர்களிடையே தொற்று புண்கள் அல்லது புண்களுடன் நெருக்கமான அல்லது நேரடியான உடல் தொடர்புகளால் ஏற்படுகிறது. பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளது என  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com