கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரை இனந்தெரியாதோர் கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கும் பொன்னாலை சந்திக்கும் இடைப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் நேற்று (03) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொன்னாலை பொன்னொளிநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் யாழில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரவு 07.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். 

வீதியை அண்மித்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று முதியவரை வழிமறித்து கத்திமுனையில் அவரது மோட்டார் சைக்கிளையும் அதனுள் வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து முதியவர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கையில் முதியவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ஆகியவை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள வீதியொன்றிலில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com