
வவுனியாவில் இன்று (11.04.2020) கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கிராமநிலை அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குருமன்காட்டு பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் குருமன்காட்டு பகுதியில் வாடகை வீட்டில் இருப்பதாகவும் சமணன்குளம் பகுதியில் தன்னுடைய தற்காலிக பதிவு இருப்பதாகவும் கூறி, சமணன்குளம் கிராம சேவகரிடம் சென்று தான் வியாபாரம் செய்வதாகவும், ஊரடங்கு வேளையில் தான் வெளியில் சென்று வியாபாரம் செய்வதற்கு வாகனத்திற்குரிய அனுமதி பத்திரத்தை தருமாறும் கிராமசேவரிடம் முரண்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் முதலும் இவ்வாறு கிராம சேவகரிடம் அனுமதி பத்திரத்தை தருமாறு விடாப்பிடியாக இருந்ததாகவும், அனுமதிபத்திரத்தை தராவிட்டால் கிராமசேவகரின் உயிரிற்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் பிரதேச செயலகத்திற்கு குறித்த நபர் சென்று அனுமதி பத்திரம் தருமாறு முரண்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் தம் கடைமைக்கு இடையூறு செய்வதாக சமணன்குளம் கிராமநிலை அதிகாரியால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு இன்று தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலும் , கிராமநிலை அதிகாரிக்கு குறித்த நபரால் விடுக்கப்பட்ட உயிரச்சுறுத்தலுக்கு அமைவாகவுமே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.