ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சீனாவுக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட்  சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட் கிழமை ஆரம்பித்துள்ள இந்த விஜயமானது 28 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலானது என்பதுடன் சீனாவின் வடமேற்கு பிராந்தியத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் சீன அரசின் அழைப்பின் பேரில் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் விஜயமானது மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் எடுத்துக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

‘சுயாதீனமான மதிப்பீட்டை’ நடத்துவதற்கு, உய்குர் பிராந்தியத்தில் உள்ள சின்ஜியாங்கிற்கு ‘தடையின்றி’ அணுகல் தேவை என்று ஆணையாளர்  வலியுறுத்தியிருந்தாலும், அவரது வருகையின் விதிமுறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை. மேலும் சீன அதிகாரிகள் சில விடயங்களை மேற்கோள் காட்டி அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில், சீன அதிகாரிகள் திபெத்தியர்களின் கலாச்சார, மொழி மற்றும் மத சுதந்திரங்களை முறையாக அழிக்கவும், ஹொங்கொங் மக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திர சமூகத்தை அழிக்கவும் முயற்சிப்பதாக கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய குழுக்களின் உறுப்பினர்களுக்கு எதிரான தடுப்பு, சித்திரவதை, கலாச்சார துன்புறுத்தல்களை  சீன அரசாங்கம் செய்துள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com