முகக் கவசத்தால் வைத்தியசாலையில் ஒருவர் காவல் நிலையத்தில் ஒருவர்

முகக் கவசம் இல்லாமல் வைத்தியசாலைக்கு வந்த நபரொருவர் தாக்கியமையினால் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஊழியரொருவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூஸா, பிடிவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நேற்று இரவு முகக்கவசம் அணியாமல், காயமடைந்த நபரொருவரை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துவந்துள்ளார்.

அதன்போது, முகக்கவசம் அணியுமாறு வைத்தியசாலை ஊழியரொருவர் குறித்த நபரை அறிவுறுத்தியிருந்தார்.

இந் நிலையில், இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.