
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒருமாத காலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி போராட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு மூடர்களின் செயற்பாட்டின் பெறுபேற்றினால் தாய் நாடு நீதியற்ற நாடாக மாற்றமடைந்துள்ளது. எமது வரலாறு வெள்ளை நிறத்திலா அல்லது கறுப்பு நிறத்திலா எழுதப்பட வேண்டும் என்பது எம் கையில் உள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதை கட்சி பேதமின்றி மனிதாபிமானத்துடன் கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல் இலங்கை வரலாற்றில் கறுப்பு முத்திரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களுக்கு ஒழுககத்தனமான முறையில் பதிலளிக்க வேண்டும்.
காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அரசியல்வாதிகளினதும், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டதன் விளைவாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சட்டவாட்சி,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்காமல் அனைத்து தரப்பினரும் இலங்கையர் என்ற அடிப்படையில் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை நாட்டை நேசிக்கும் சகல பிரஜைகளிடமும்,கட்சி பேதமின்றி மனிதாபிமானத்துடன் என வலியுறுத்துகிறேன்.
எமது வரலாறு வெள்ளை நிறத்திலா அல்லது கறுப்பு நிறத்திலா எழுதப்படும் என்பது எம்கையில் தான் உள்ளது.ஒற்றுமையினையும்,ஒழுக்கத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய வரலாறு இலங்கைக்கு உண்டு.
ஆகவே தற்போதைய நெருக்கடியான நிமையில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.