
அரசியலமைப்பின் பிரகாரம் நான் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதன் அடிப்படையிலேயே முப்படையினருக்கு துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
‘அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளமையால் அமைச்சுக்களின் செயலாளர்களும் இயல்பாகவே பதவி விலக்கப்படுவர்.
அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கமல் குணரத்னவும் பதவி விலக்கப்படுவார்.
எனவே பதவியில் இல்லாத ஒருவரால் துப்பாக்கப்பிரயோகத்திற்கு அனுமதியளிக்கப்படுவது சட்ட விரோதமானது’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் (11) புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேட்ட போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை எனக்கு வழங்குமாறு எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை. எனினும் 35 ஆண்டுகள் சீருடையணிந்து நாட்டுக்காக சேவையாற்றிய எனக்கும் , மீண்டும் அவ்வாறானதொரு சேவையை ஆற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் போது அதனை தட்டிக்கழிக்க முடியாது. பதவியை ஏற்பது தகுதியற்ற செயலாகவும் ஆகாது.
அத்தோடு முன்னாள் பிரதமரின் பதவி விலகலுடன் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
அதன் பின்னர் நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு , அரசியலமைப்பிற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நான் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
அதன் அடிப்படையிலேயே முப்படையினருக்கு துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதியும் வழங்கப்பட்டது என்றார்.
இதேவேளை நிதி அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செயலாளர்களும் மீள நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.