
ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகிறது.
வன்முறை சம்பவங்கள் இராணுவ ஆட்சிக்கு வித்திடும். இராணுவ ஆட்சியை தோற்றுவிப்பது ஆட்சியாளரது தேவையாகவும் அமையலாம். ஆகவே பொதுமக்கள் வன்முறையில் ஈடுப்படுவதை தவிர்த்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் ஈடுப்படுவது அவசியம்.
வன்முறைகள் தீவிரமடைந்தால் அது ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு ஜனாதிபதி,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பம் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும்.
ஒரு தனி குடும்பம் நாட்டின் அரசியல், பொருளாதாரம், பொது அமைதி ஆகியவற்றை முழுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெறுக்கத்தக்க செயற்பாடுகளை மேற்கொண்டு முழு நாட்டிலும் வன்முறையை தூண்டிவிட்டு பதவி விலகினார். தற்போது நாட்டின் அரசாங்கம் என்பதொன்று கிடையாது.
தீவிரமடைந்திருந்த அரசியல் ஸ்தீரமற்ற நிலைமை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதுடன்,வன்முறை சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
அரசியல் ஸ்தீரதற்ற நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு முன்னர் சமூக கட்டமைப்பில் நிலவும் அமைதியற்ற தன்மைக்கு தீர்வு காண வேண்டும்.
காலி முகத்திடலில் கடந்த ஒருமாத காலமாக மேற்கொள்ளப்படும் அமைதி வழி போராட்டத்தின் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிலேட்சத்தனமான தாக்குதலை பிரயோகிக்க கட்டவிழ்த்து விட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் தலைதூக்க வழியேற்படுத்திக்கொடுத்துள்ளார்.
நாட்டின் அமைதியினை சீர்குலைத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதான முன்னாள் அமைச்சர்கள் உட்பட பொதுஜ பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படவேண்டும்.
காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’போராட்டத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இடம்பெறும் போராட்டங்களில் தீ வைத்தல்,சொத்துக்களை கொள்ளையடித்தல்,தனிப்பட்ட பழிவாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
ஒரு திட்டமிட்ட குழுவினரால் வன்முறை சம்பவங்கள் சூட்சமமான முறையில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வன்முறை சம்பவங்கள் இவ்வாறு தீவிரமடைந்தால் அது இராணுவ ஆட்சிக்கு வித்திடும்.இராணுவ ஆட்சியாளர்களுக்கும் அதன் தேவைப்பாடு அவசியமாகும்.
ஆகவே பொது மக்கள் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை விளங்கிக் கொள்ள வேண்டும்.பொலிஸாரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.