திருட்டு சந்தேக நபர் திருடிய பொருட்களுடன் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதி வீட்டில் திருடிய சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று(19) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் காஸ் சிலின்டர் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் திருட்டு சந்தேக நபர் ஓட்டமாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி, தையல் இயந்திரம், காஸ் சிலின்டர் என்பன விற்பனை செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.