வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தய விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. வீச்சம் உள்ள கசப்பான எண்ணெய். இதில் உயிர்ச்சத்துக்கள, கனிப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. சமையலில் வாசமூட்ட வெந்தய விதையை சமையலில் சேர்ப்பார்கள்.

மருத்துவ குணங்கள்

எரிச்சலைத் தடுக்கும், சிறுநீரைப் பெருக்கும், இரைப்பை அசௌகரியங்களை நீக்கும். பாலுணர்வைத் தூண்டும், தாய்ப்பாலைப் பெருக்கும், உடம்பின் உள்ளுறுப்புக்களைச் சுத்திகரிக்கும். அழகு சாதனம் மற்றும் கேசப் பராமரிப்பில் வெந்தயம் உபயோகமாகும்.

உடலில் ஏற்ப்படும் திருகுவலி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு வாயு உபத்திரவம், நாட்பட்ட அஜிரிணம் ஆகிய உபாதைகளில் நல்ல பயனை அளிக்கும்.

வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகமாதலினால் சோகையில் குணம் பெற உதவும்.

வெந்தய விதைகளை நெய்யில் வறுத்து, பொடி செய்து அத்துடன் கோதுமை மாவு, சக்கரை சேர்த்து அல்வா தயாரிக்கலாம். தினமும் சிறிதளவு இந்த அல்வாவை சாப்பிட்டு வர பிரசவித்த பெண்கள் விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இளம் தாய்மார்கள் வெந்தய விதையை கஞ்சி வைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

உமிழ் நீர் சுரப்பியின் இயக்க கோளாறு காரணமாக சிலருக்கு உணவின் சுவை தெரியாமல் போய்விடும். வெந்தய விதை சுவைத் திறனை ஊக்குவிக்கும். மூக்கில் சளியப்படலம் உருவாகி மணத்தை நுகரமுடியாத நிலையில் உள்ளவர்கள் வெந்தயத்தைக் கொண்டு தங்கள் நுகரும் சக்தியை மேம்படுத்திக் கொள்ளலாம்.

வெந்தய விதை பொடுகை அகற்றவும் பயன்படுகின்றது. இரண்டு மேசைக்கரண்டி விதையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் மிருதுவாகிவிட்டிருக்கும் விதையை அரைத்து பசை போலாக்கிக் கொள்ளவும். இந்தப் பசையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு சீயக்காய் கொண்டு தலையை அலசி விடலாம்.

காய்சலில் அவதிப்படுபவருக்கு வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கச் செய்தால் காய்ச்சல் தணியும்.

வயிற்றில் ஏற்ப்படும் அழற்சிக்கும் வெந்தய தேநீர் மிகவும் நல்லது. குடல், சிறுநீரகம் மற்றும் சுவாசப் பாதையில் உண்டாகும் சளியை அகற்றும். குடற் புண்ணிலும் நற்பலன்களை வழங்கும். மார்புச்சளி, காய்ச்சல், பீனிசம் (சைனஸ்), நீர்க்கோப்பு ஆகிய உபாதைகளின் தொடக்க நிலையில் வெந்தய தேநீர் குணம் பெற உதவும். உடம்பை வியர்க்கச் செய்து நச்சுத் தன்மையை வெளியேற்றும். காய்ச்சல் கட்டத்தை குறுகியதாக்கும். வெந்தய தேநீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சம் சாறு சேர்த்துக்கொள்ள மணம் கிடைக்கும்.

தொண்டைப் புண்ணுக்கு வெந்தய நீரைக் கொப்பளிக்க சரியாகும். 1.25லீ தண்ணீரில் இரண்டு மேசைக் கரண்டியளவு வெந்தய விதையை இட்டு தணிவான தீயில் அரை மணி நேரம் காய்ச்சி எடுக்க வேண்டும், ஆறவிட்டு வடிகட்டி கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

வெந்தய தேநீர் வாய் நாற்றத்தைப் போக்கும். வாய் மற்றும் நாசிப் பாதையில் சளி தங்குவதால் கெட்ட நாற்றம் ஏற்ப்படும் இதே பிரச்சனை சிறுநீர்ப் பாதை, இரைப்பை குடல் பாதை, இரத்த ஓட்டம், பிறப்புறுப்பு ஆகியவற்றிலும் ஏற்ப்படக்கூடும். வெந்தய தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும். நீரிழிவுக்கான சிகிச்சையிலும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். தினமும் 25கி. வெந்தயத்தை உட்கொள்ள இரத்தத்தில் கூடிய சக்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயாளியின், குளுக்கோஸ், குருதிக்கொழுப்பு (கொலஸ்ரோல), ட்ரைகிளிசரைட் அளவுகளையும் அது குறைக்கும்.

வயிறூதல், உதடு வெடிப்பு ஆகியவற்றிற்கும் வெந்தய விதை மருந்தாகும். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்யும், பசி உணர்வைத் தூண்டும். உடல் சூட்டைத் தணித்து குளிர்மை செய்யும். வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்றபின்பு பாலோ, தயிரோ குடிக்க வயிற்றுவலி, வயிற்றுச் சூடு நீங்கும்.

வெந்தய விதையை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும் குறையும்.

புளுங்கல் அரிசி ஒரு கோப்பை, இரண்டு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி உழுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து வெந்தய தோசை மா தயார் செய்யலாம். வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது.

மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது, மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது, மாதவிலக்கின் போது வயிற்றுவலி, இடுப்பு வலி ஏற்ப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சக்கரை கலந்து சாப்பிடலாம்.

வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிசெய்யும். இந்தக் கஞ்சியோடு தேங்காய்ப்பால், சில உள்ளிப்பற்களை சேர்த்துச் சாப்பிட குடல் வாய்வு நீங்கும். சூட்டால் வரும் வாய்ப்புண்ணும் ஆறும். வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com