மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் இலங்கையை சாடுவதாக வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு!

இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடர்  எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதனையும் செயற்படுத்த வேண்டும் என எந்தவொரு அரசாங்கமும் இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் ஆற்றப்படும் நல்ல விடயங்களை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதையே அவர்கள் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் காரணமாக, மாதமொன்றுக்கு அனைத்து இனங்களையும் சேர்ந்த சுமார் 250 உயிர்கள் காவுகொல்லப்பட்டதாகவும் ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின்னர் ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்த்து உயிரிழப்புகள் இடம்பெற்ற சந்தர்ப்பம் பூச்சியமாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மீது குற்றம் சுமத்தும் நாடுகளின் கடந்த இரண்டு தசாப்தகால செயற்பாடுகளைப் பார்த்தால், அவை மனித உரிமைகளை மீறி, வேறு நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகளில் பெருமளவான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பல சந்தர்ப்பங்களைக் குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com