6 பேரின் உயிரைக் காவுகொண்ட படகுச் சேவைக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை – நிமல்

குறிஞ்சாக்கேணி தடாகத்தில் இயங்கும் படகுச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபைத் தலைவருடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவரினால் படகுச் சேவை நடாத்தப்படுவதாகவும் இதற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குளத்தின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாலத்தின் நிர்மாணப்பணிகள் முடியும் வரை மக்கள் தடாகத்தை சுற்றி செல்வதற்காக தற்காலிக வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் படகில் பயணிக்கும் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை கிண்ணியா –  குறிஞ்சாக்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படகில் இருந்த 11 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.