உயர்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலால் குழப்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991ம் ஆண்டு முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு – பட்டங்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ள நிலையில், கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப நிலை தோன்றியிருக்கிறது.

உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி, வெளியிடப்பட்ட 2163/21ம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 17வது புதிய துறையாக மொழி பெயர்ப்புக் கற்கைகள் துறையும், விஞ்ஞான பீடத்தில் 7வது கற்கைத் துறையான கடற்றொழில் துறையை உடனடுத்து 8 ஆவது கற்கைத் துறையாக கணினி விஞ்ஞானத் துறை சேர்க்கப்படுவதாகவும் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், சகல வளாகங்களின் முதல்வர்களுக்கும், சகல நிலையங்களினதும் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவினால் வெளியிடப்பட்ட 1435/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படியும், 2007 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 09 ஆம் திகதி அப்போதைய உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வ வர்ணபாலவினால் வெளியிடப்பட்ட 1518/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படியும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இருந்த 6 துறைகளில் 3 ஆவதாக கணினி விஞ்ஞானத்துறை அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

தற்போது 7 ஆவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கடற்றொழில் துறையும், அதனை உடனடுத்து 8 ஆவது கற்கைத் துறையாக கணினி விஞ்ஞானத் துறை புதிய துறையாக அறிவிக்கப்பட்டிருப்பது விஞ்ஞான பீடத்தில் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

இது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக உயர்கல்வி அமைச்சுக்குச் சுட்டிக்காட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது.