ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள்  நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னிலையாக விலக்களிக்க வேண்டும் என அப்பலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது  ஆறுமுகசாமி ஆணையத்தின்  ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை எனவும்  அப்பலோ மருத்துவமனை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரணை செய்வது ஒருதலை பட்சமானது எனவும் அப்பலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசாங்கம் சிசிடிவி கேமராக்களை விலக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.