மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.