கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் வாசு

கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ஒப்புக்கொள்ளாவிட்டால் மக்களிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த ஒப்பந்தம் குறித்த தீர்மானம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டுக்கமைய எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குறித்த பங்காளி கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னர் ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் எதிர்ப்பதாக தெரிவித்து வரும் ஆளும்தரப்பு பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நேற்றும் இந்த விடயம் தொடர்பாக கூடி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.