இனவாத உணர்ச்சி உயிர் கொல்லியை விட மோசமானது

இனவாத உணர்ச்சியானது கொரோனா வைரஸ் உயிர்கொல்லியை விட மோசமானது என பிரித்தானியாவை சேர்ந்த உலக குத்து சண்டை சம்பியனான அந்தனி ஜோசூவா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கறுப்பின பொதுமகன் ஜோஜ் புளோயிட் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச ரீதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பிரித்தானியாவில் அவரது சொந்த ஊரான வற்போட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

உயிர்களை காவு கொள்ளும் இந்த உயிர்கொல்லியினை ஒழிப்பதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கறுப்பு இனத்தை சேர்ந்த 30 வயதான அந்தனி ஜோசூவா உலக குத்துச் சண்டை சம்மேளனம், உலக குத்து சண்டை சங்கம் மற்றும் உலக குத்து சண்டை அமைப்பு ஆகியனவற்றினால் உலக குத்து சண்டை சம்பியன் பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.