பெற்றோர்களின் அனுமதியுடனே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, பெற்றோரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோரிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.