மன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தலில்

மன்னார் – பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளை சேர்ந்த 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இருவர் படகு மூலமாக கடந்த 29 ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புனானை தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, இவர்கள் இருவரையும் சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்கு அழைத்து வந்த ஐவரும் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்றிரவு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருடன் தொடர்புகளை பேணிய பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளை சேர்ந்த 58 பேர் சுய தனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.