கன்சர்வேடிவ் எம்.பி. சேர் டேவிட் அமேஸ் கொல்லப்பட்டது பயங்கரவாத சம்பவம்: பொலிஸார் அறிவிப்பு!

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தனியாக செயற்பட்டதாக பொலிஸ்துறை நம்புகிறது, ஆனால், இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய நேரம் பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் சேர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டார். 1983ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.