கொவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களை வரவேற்கும் அமெரிக்கா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் அமெரிக்கா வரவேற்கவுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உதவி ஊடகச் செயலர் கெவின் முனோஸ் தனது சுட்டுரையில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

‘கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் நவம்பர் 8ஆம் திகதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவர்.

இந்த அறிவிப்பு வான்வழியுடன் தரைவழியாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கும் பொருந்தும்’ என பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய பயணக் கொள்கையில், அமெரிக்கா அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் ‘ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், ஃபைஸர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அஸ்ட்ராஸெனெகா- ஒக்ஸ்போர்ட், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்றையும் உலக சுகாதார அமைப்பு ஆதரித்துள்ளது.